தாழ்த்தப்பட்டோர் குறித்து இழிவாக பேசிய புகாரில் கைதான நடிகை மீரா மிதுன் கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்த நடிகை மீரா மீதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவில் வைத்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில், சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை மீரா மிதுன், காவல் ஆணையர் அலுவலகத்தில் கேமராவை நோக்கி கூச்சல் போட்டவாறே சென்றார்.போலீசார் தன்னுடைய கையை உடைத்துவிட்டதாகவும் மீரா மிதுன் கூறினார்.
மீரா மிதுனின் கதறலை சற்றும் பொருட்படுத்தாத போலீசார் அவரை வேகமாக உள்ளே அழைத்துச் சென்று, விசாரணையை துவங்கியுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் மீராமிதுன் ஏதேதோ பேசுவதாகவும், கமிஷ்னரை வரச்சொல்லி மீராமிதுன் அடம்பிடிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து மீரா மிதுன் பேசியிருந்த வீடியோவில் உடனிருந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவை வெளியிட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விசாரணைக்கு பின்னர், நடிகை மீரா மிதுனையும், அவரது ஆண் நண்பரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.