சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை, நவீன கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு தானியங்கி முறையில் கணினி மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் 5 போக்குவரத்து சிக்னல்களில் 2019 ஆம் ஆண்டு, ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் ஓருங்கிணைந்து 61 நவீன கேமிராக்கள் நிறுவப்பட்டன.
அந்த சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டறையில் கண்காணித்து, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த அபராத சலான்களை போலீசார் அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் தேசிய தகவல் மையம் உடன் ஒருங்கிணைந்து, இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் உடனுக்குடன் அபராத சலான்கள் அனுப்பும் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அண்ணாநகர் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு தானியங்கி சலான் அனுப்பும் புதிய நடைமுறையை தொடங்கி வைத்தார்.
இந்த கேமிராக்கள் சாலை போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை கண் இமைக்கும் நேரத்தில் படம் எடுத்து, அதை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் தேசிய தகவல் மையத்தின் சர்வருக்கு அனுப்பி விடும். அந்த சர்வரில் ஏற்கனவே அனைத்து வாகன உரிமையாளர்களின் பதிவு எண்களுடன் செல்போன் எண்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், தானியங்கி முறையில், சாலை போக்குவரத்து விதிமீறல் வழக்குக்கான அபராத சலான் கணினி மூலம் வாகன உரிமையாளரின் ‘செல்போன் எண்ணுக்கு உடனடியாக அனுப்பப்படும்.
இந்த நிகழ்வின் போது, செய்தியாளரிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்த புதிய தொழிட்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1 லட்சம் வழக்குகள் வரை பதிவு செய்ய முடியும் என தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், 4 சாலை போக்குவரத்து விதிமீறல்கள் இணைக்கப்பட்டு உள்ளது. வெள்ளை கோட்டை தாண்டி நிறுத்துவது, சிவப்பு விளக்கை மீறி செல்வது, அதிவேகமாக செல்வது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டுவது ஆகிய விதிமிறலில் ஈடுபடுபவர்கள் மிது நடவடிக்கை எடுக்க முடியும்.
அடுத்தகட்டமாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்வது ஆகிய விதிமிறல்களும் இணைக்கப்பட உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.