சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவனிடம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவலர் இருவர் 63 ஆயிரத்து 500 ரூபாயைப் பறித்துக் கொண்டதாக எழுந்துள்ள புகார், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிஷோர் என்கிற 11ஆம் வகுப்பு மாணவர் பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் நேற்றிரவு சென்னை கோயம்பேட்டுக்கு வந்துள்ளார்.
பேருந்து நிலையக் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் இரவுப் பணியின்போது அங்கு நின்ற கிங்ஸ்டன் கிஷோரை விசாரித்துள்ளனர். வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்த கதையைக் கூறியதும் அவரிடம் இருந்த பணத்தை மிரட்டிப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
செய்வதறியாது திகைத்த மாணவன் பிறகு செல்பேசியில் தனது தந்தை அந்தோனி செல்வத்தைத் தொடர்புகொண்டு நடந்ததைத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு விரைந்து வந்த அந்தோனி செல்வம் கோயம்பேடு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமிடம் புகார் அளித்தார்.
இதையடுத்துக் காவலர்கள் இருவரிடமும் மதுரவாயல் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். பணம் பறித்ததை இருவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.