வளர்ப்பு யானைகள் மனிதாபிமான முறையிலும் கண்ணியமான முறையிலும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது மற்றும் பாகன்கள் நியமிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளை கோவில் நிர்வாகங்கள் முறையாக பின்பற்றுகிறதா என அறநிலைய துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
அது சம்மந்தமான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டதையடுத்து, மாநில அரசு தேர்தல் ஜுரத்தில் இருப்பதாக கூறி, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.