சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோர், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் நிலையே காணப்படுகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக பயணித்து வருகின்றனர்.
முகக்கவசம் அணிந்திருப்பவர்களிலும் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முறையாக அணியாமல் கட்டாயத்தின் பேரில் பெயருக்கென அணிந்து பயணிக்கின்றனர்.
காலை, மாலை உள்ளிட்ட அலுவலக நேரங்களில் பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டும் பயணம் செய்வதாக புகார்கள் வந்துள்ளன.
போக்குவரத்து ஊழியர்களும் மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பேருந்துகள் இயங்க தளர்வு அளிக்கப்பட்ட போது அனைத்து பேருந்துகளிலும் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டு, பயணிகள் கைகளை சுத்தம்ச் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி, பேருந்து புறப்படுவதற்கு முன் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி தெளித்து பேருந்துகளை சுத்தம் செய்வதாகவும், தனித்தனியாக பயணிகளுக்கு சானிடைசர் வழங்க இயலாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து ஊழியர்களும் பயணிகளை மாஸ்க் அணியுமாறு வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இரவு நேர ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகத்தில் 12 முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.