விவேகம் மிக்க கருத்துக்களை காமெடியாக மக்கள் மனதில் விதைத்த வித்தகரும், மரங்களை நட்டு கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்த சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைந்து மீண்டு வரவேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக தலைநகர் சென்னைக்கு பேருந்தில் வரும் இளைஞர்களின் உணர்வையும், காட்சிகளாக்கி ரசிகர்களது மன அழுத்தங்களை போக்கி வாய்விட்டு சிரிக்க வைத்தவர் சின்ன கலைவானர் விவேக்..!
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும் என்று நகைச்சுவையுடன் சமூகத்திற்கு தேவையான உன்னத கருத்துக்களால் சிரிப்பு மருந்தூட்டிய நகைச்சுவை மருத்துவர் விவேக்.
மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கை மிக்க சமுதாயத்தை கட்டமைக்க தனது காமெடியை கருவியாக்கிய பகுத்தறிவு கருத்துக்களை விதைத்த வித்தகன் விவேக்.
சென்னை மவுண்ரோட்டின் மழைகால நிலையை ஒற்றை வசனத்தால் சுட்டிக்காட்டி அதிகார வர்க்கத்தின் பாராமுகத்தை திரும்பி பார்க்க வைத்த துணிச்சல் மிக்க திரைக்கலைஞர் விவேக்.
அரசு எந்திரத்தின் குறைபாடுகளையும் காமெடியால் சிறப்பாக விமர்சிக்க முடியும் என்பதை பாளையத்தம்மான் வசனத்தால் விளாசியவர் விவேக்.
தமிழ் என்ற பெயரால் இளைய தலைமுறையை மூளை சலவை செய்யும் மோசடி அரசியல்வாதிகளை அடையாளம் கட்டிய அசல் தமிழ் போராளி விவேக்.
சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சாதி அடையாளங்களை காட்டமல் கருத்துக்களால் கிழித்து தொங்கவிட்ட திரையுலக பாரதி விவேக்..!
அப்துல்கலாமின் அக்கினிச்சிறகாய் ஊர் ஊராய் சென்று மரக்கன்று நட்டு வைத்து மக்களின் இதயங்களை தொட்ட ஜனங்களின் கலைஞன் விவேக்கிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு அவரது ரசிகர்களை பெரும் கவலையடைய செய்துள்ளது.
மாடர்ன் தமிழ் திரை நகைச்சுவையின் சுவாசமாக திகழ்ந்த விவேக் என்ற அந்த உன்னத கலைஞனுக்கு வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முன்னனி நடிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவர் உடல் நலம் பெற்று எழுந்துவர வேண்டிக் கொண்டு அறிக்கை விட்டுள்ள நிலையில் லட்சோப லட்சம் திரை ரசிகர்கள் ஜனங்களின் கலைஞன் விவேக் நலம் பெற மனதார பிரார்த்தனை செய்து வருகின்றனர்.