சென்னையில் நள்ளிரவில் மது போதையில் பைக் ஓட்டி வந்து போலீசில் சிக்கிய இளைஞர் ஒருவர், ஆல்கஹால் அளவை கண்டறியும் ப்ரீதலைசர் கருவியில் வாயை வைத்து ஊத மாட்டேன் என பல மணி நேரமாக அடம் பிடித்த சம்பவம் அரங்கேறியது.
சென்னையில் இரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் குடிபோதையில் வரும் வாகனங்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு எழும்பூரில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி வந்து கொண்டு இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கினர். அதனை ஒட்டி வந்த இளைஞரிடம் மதுவின் அளவைக் கண்டறியும் ப்ரீதலைசர் இயந்திரத்தைக் காண்பித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஊதுமாறு கூறினர். ஆனால் தாம் மது குடித்திருப்பது உண்மைதான் என்றும் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறும் கூறிய அந்த இளைஞர், ப்ரீதலைசர் கருவியில் மட்டும் வாய் வைத்து ஊத மாட்டேன் என்றார்.
ப்ரீதலைசர் கருவியில் ஊதிவிட்டு நீங்கள் உங்கள் வழியில் போய்க்கொண்டே இருக்கலாம் என்று போலீசார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத அந்த இளைஞர், தான் யார் தெரியுமா, தனக்கு யாரையெல்லாம் தெரியும் தெரியுமா என்று சலம்பல் விட ஆரம்பித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பான காவலர்கள், போக்குவரத்து ஆய்வாளரை போனில் அழைத்து விஷயத்தைக் கூறினர். விரைந்து வந்த போக்குவரத்து ஆய்வாளர் முன்பு கையைக் கட்டிக் கொண்டு பவ்யம் காட்டிய போதை ஆசாமியிடம் ஆய்வாளரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறுமையாக விதிமுறைகளை எடுத்துக் கூறினார். ஆனால் அவரிடமும் அதே புராணத்தைப் பாடிய இளைஞர், ப்ரீதலைசர் கருவியில் மட்டும் ஊத மாட்டேன் என அடம் பிடித்தார்.
நீண்ட நேரமாக போலீசாரின் பொறுமையை சோதித்த போதை மைனர், ஒரு வழியாக இறங்கி வந்து ப்ரீதலைசர் கருவியில் வாயை வைத்து ஊதினார். ப்ரீதலைசர் கருவியின் திரையில் 200 மில்லி கிராம் என காண்பித்தது. அதன் பிறகான விசாரணையில் அந்த இளைஞரிடம் ஓட்டுநர் உரிமமும் கைவசம் இல்லை என்பது தெரியவந்தது. அதனால் அவரது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனால் போதை இளைஞர் பொடிநடையாக வீட்டை நோக்கி நடந்தே கிளம்பினார்