தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தின் நிலத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்கச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் பாபு தொடுத்த வழக்கில், சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளனூரில் வாங்கிய 95 ஏக்கர் 55 சென்ட் நிலத்தில் 14 ஏக்கர் 58 சென்ட் நிலத்தைப் பெங்களூரைச் சேர்ந்த ஆட்கோ நிறுவனத்துக்குச் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் விற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 10 ஏக்கர் 32 சென்ட் நிலத்தை ஜீசஸ் மிசனரீஸ் அமைப்புக்குப் பெங்களூர் நிறுவனம் விற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலத்தின் பத்திரப் பதிவுக்கும், சங்க நடவடிக்கையில் முந்தைய நிர்வாகிகள் தலையிடவும் தடை விதிக்கக் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யவும், சங்க நடவடிக்கையில் முந்தைய நிர்வாகிகள் தலையிடவும் இடைக்காலத் தடை விதித்தார்.
இது குறித்து மத்திய மாநில அரசுகள், பெங்களூர் ஆட்கோ நிறுவனம், ஜீசஸ் மிசனரி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டார்.