செம்பரம்பாக்கம் ஏரியில், மகன் மற்றும் மகளோடு, தந்தை விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் அடுத்த புது வட்டாரத்தைச் சேர்ந்த உஸ்மான் என்பவர், தனது 11 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகனுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஏரிக்குள் விழுந்துவிட்டதைக் கண்ட அங்கிருந்தவர்கள், அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். உயிரிழந்த நிலையில் உஸ்மானின் உடல் முதலில் மீட்கப்பட்ட நிலையில், 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர், நீரில் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை தீயணைப்புப்படையினர் மீட்டனர்.
ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூவரும், ஏரியில் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.