சென்னையில் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சமைத்துப் படைக்கும் உணவுக்கு மத்திய அரசின் சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, கோவில்களில் சுவாமிக்குப் படைக்கும் உணவு, பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றைச் சமைக்கும் கூடங்களில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. நெல்லையப்பர் கோவில் பாபநாசம் கோவில் ஆகியன இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள கோவில்கள் சான்றிதழைப் பெறுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, கோவில்களில் தெய்வத்துக்குப் படைத்துப் பக்தர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.