சென்னை பெசன்ட் நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தம்பதியை பிடிக்க சென்ற போது, போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டியுள்ள ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம், மனைவி உஷாவுடன் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பொதுமக்கள் அளித்த தகவலின்படி சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் இரவு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
தைப்பூசத்தையொட்டி வியாழக்கிழமை அரசு விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ரத்தினம் - உஷா இருவரும் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றதாக தம்பதியினர் இருவரையும் போலீசார் பிடித்தனர்.
திடீரென அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உஷா, கைது செய்யப்படுவதை தடுக்க உடலின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப்பற்றி வலியில் அலறினார். அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே சிகிச்சை பெற்று வரும் உஷா கொடுத்த வாக்குமூலத்தில், தான் மது விற்றது உண்மைதான், ஆனால், போலீசார் அவமானப்படுத்தியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் உஷாவின் உறவினர்கள் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல் துறையினர் மீது குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள போலீசார், உஷாவின் கணவர் ரத்தினம் மீது அடையாறு மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மதுவிலக்கு பிரிவில் சரித்திர பதிவேட்டு குற்றவாளி பட்டியலில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
கைது நடவடிக்கைக்காக எப்போது சென்றாலும், கம்பீரம் படத்தில் வடிவேலு காட்சியில் வருவது போல், உஷா பொது இடத்தில் ஆடைகளை களைந்துவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டவர் என போலீசார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அவர் வசிக்கும் ஓடை குப்பம் பகுதி மக்களிடம் பேட்டி எடுத்து போலீசாரே வெளியிட்டு விளக்கமளித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மது விற்றதாக ரத்தினத்தை கைது செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு முயன்றதாக உஷா மீதும் சாஷ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.