கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த மழையைத் தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை நேற்றும் நீடித்தது. சென்னை எழும்பூர், அண்ணாநகர், கே.கே.நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போலத் தேங்கியது.
நேற்று மாலை மழை நின்றதையடுத்து சாலைகளில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,676 கனஅடி வீதமும், புழல் ஏரியில் இருந்து 750 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியில் இருந்து 5,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
3 ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.