நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீட் மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவி தீக்சா, அவரது தந்தை பாலசந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி பாலசந்தர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகள் தீக்சா தலைமறைவாக உள்ளார்.
பாலசந்தரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இடைத்தரகராக அறிமுகமாகிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயராம் என்பவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு 2 மாணவிகளின் விவரங்கள் மற்றும் மதிப்பெண்களை இணைத்து போலி மதிப்பெண் சான்றிதழ் உருவாக்கித் தந்ததாக கூறியுள்ளார்.
மகள் தீக்சாவுக்கும் மதிப்பெண் முறைகேட்டுக்கும் தொடர்பில்லை என்றும், தன்னுடைய அழுத்தம் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகியே கலந்தாய்வுக்கு வந்ததாகவும் பாலசந்தர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இடைத்தரகர் ஜெயராம், வேறு யாருக்கேனும் போலி மதிப்பெண் உருவாக்கி கொடுத்துள்ளாரா என்றும் சென்னை பெரியமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.