சென்னையில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்யும் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில், 3 வெவ்வெறு நகைக்கடைகளில், டிப்டாப்பாக வந்த நபர், தலா 10 நாட்கள் இடைவெளிகளில், தங்க முலாம் பூசிய கவரிங் டாலர்களை அடமானம் வைத்து, சுமார் 80 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் நகை கடை உரிமையாளர்களே, தேனாம்பேட்டை பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், நடைபாதையில் வசிக்கும் பாலாஜி என்ற அந்த நபர், கமிஷனுக்காக, தேனாம்பேட்டை மட்டுமின்றி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் போலி தங்க நகைகளை அடகுவைத்து கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக, 1,500 ரூபாய் கமிஷன் கொடுப்பார்கள் என்றும், போலீசாரின் விசாரணையில், அந்த நபர் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.