சென்னையில் மதுபோதையில் வந்ததால், தனது காரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசாரை பழிவாங்க அவர்களின் ரோந்து வாகனத்தை கடத்தி சென்று விபத்து ஏற்படுத்தியதாக டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குன்றத்தூர் மாதா மருத்துவமனையில் மருத்துவராகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணிபுரிந்து வருபவர் முத்து விக்னேஷ் . நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொண்டு விட்டு, நேற்றிரவு 1.30 மணிக்கு சேத்துபட்டு ஹாரிங்டன் சாலை சந்திப்பில் இவர் காரில் வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் சிவசங்கரன், காவலர் சுந்தர் ஆகியோர் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் முத்து விக்னேஷ் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்படவே, வழக்குப்பதிந்து அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.
இதை ஏற்காது நீண்ட நேரம் தகராறில் ஈடுபட்ட முத்து விக்னேஷ், பின்னர் கோபமாக அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்த நிலையில் கீழ்பாக்கம் ஈகா சிக்னல் அருகே உதவி ஆய்வாளர் சிவசங்கரனும், காவலர் சுந்தரும் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து சாலையில் பெயின்ட் அடித்து கொண்டிருந்ததை பார்த்துள்ளார். பின்னர் அவர்களை பழிவாங்கும் நோக்கில், சாலையோரம் நின்றிருந்து ரோந்து வாகனம் அருகே சென்று டேஷ் போர்டில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவரின் வாகனத்தில் ஏறி ரோந்து வாகனத்தை துரத்தியுள்ளனர்.
கெங்கி ரெட்டி சுரங்க பாதை அருகே செல்லும் போது எதிரே வந்த ஆட்டோ மீது வாகனம் மோதியதால் அதில் பயணித்த 3 பேர் லேசான காயமடைந்தனர். அப்போது பின்னால் துரத்தி வந்த போலீசார், விக்னேசை மடக்கிப் பிடித்து ரோந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் முத்து விக்னேஷ் மீது போலீசார் வாகனத்தை கடத்தியது, ஆபாசமாக பேசியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் கீழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்றிரவு கைது செய்து சிறையிலடைத்தனர்.