தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தினை அதிமுக நாளை தொடங்குகிறது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் வேகமாக நடக்கிறது. இந்த பணிகள் நடைபெறும் நிலையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
சென்னையில் நாளை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர். இதற்காக சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.