பிரசாத் ஸ்டூடியோவில் உரிமை கோரவில்லை என்றும், இழப்பீடு கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உறுதி மொழிப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976ஆம் ஆண்டு முதல் இசைக்கோப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அந்த இடத்தில் இருந்து இளையராஜாவைப் பிரசாத் ஸ்டூடியோ வெளியேற்றியது. இது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஸ்டூடியோவில் உள்ள தனது இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்கவும், அறையில் தியானம் செய்ய அனுமதிக்கவும் கோரி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, இளையராஜாவின் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் எனப் பிரசாத் ஸ்டூடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு அனுமதிக்கும்போது இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவுக்கு நீதிபதி அறிவுறித்தி இருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உரிமையியல் நீதிமன்றத்தில் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கோரித் தொடுத்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், ஸ்டூடியோ உள்ள நிலத்தை உரிமை கோரக் கூடாது என்கிற நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிப்பதாகப் பிரசாத் ஸ்டூடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா வந்து செல்லும் நாள் குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி இளையராஜா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.