சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்காக 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 ஆயிரத்து 509 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், மின்சார வாகனங்கள், சூரிய மற்றும்
காற்றாலை சக்தி, மருந்துப் பொருட்கள், நகர எரிவாயு, இணைய வழிக் கல்வி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள், மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல, 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 27 ஆயிரத்து 324 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்உருவாக்கும் 5 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், 47 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 385 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் திட்டத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
மொத்தம் 24 திட்டங்களால் 24 ஆயிரத்து 458 கோடி ரூபாய் முதலீடு, 54 ஆயிரத்து 218 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈரப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார். மின்சார வாகனங்கள், சூரிய மின்னுற்பத்தி தளவாடங்கள் உற்பத்தியின் மையமாக தமிழகம் மாறி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.