சென்னையில் சாலையில் நடந்து வந்த முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மழை நீர் தேங்கி நின்ற சாலைப் பள்ளத்தில் கால் தடுக்கி விழுந்ததாக எழுந்த புகாரை மாநகராட்சி ஆணையர் மறுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த நரசிம்மன் வழக்கறிஞர் ஒருவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். லிபர்டி மேம்பாலம் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றிருந்தது. காலை அந்த வழியாக மேம்பால சுவரைப் பிடித்தவாறு தட்டுத் தடுமாறி நடந்து வந்த நரசிம்மன், திடீரென கீழே விழுந்திருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கீழே விழுந்த நரசிம்மனை மீட்டு அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தங்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றும் இருவர் மட்டுமே தனியாக வசித்து வந்ததாகவும் தனக்கு இனி யாரும் ஆதரவு இல்லை என்றும் நரசிம்மனின் மனைவி கதறி அழுதார்.
சாலையில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கால் இடறி விழுந்துதான் நரசிம்மன் உயிரிழந்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டிய நிலையில், அதனை மறுத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை தெரியவரும் என்றும் கூறினார்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி, பள்ளங்களில் செங்கல் துண்டுகளைக் கொண்டு நிரப்பி, தார் ஊற்றி சீரமைத்தனர். நரசிம்மன் சாலையில் உள்ள பள்ளத்தால் கால் இடறி விழுந்து உயிரிழந்தாரா, மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பன உள்ளிட்ட விவரங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீசாரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நரசிம்மனின் மனைவி கன்னியம்மாள் தனது கணவர் நடந்து செல்லும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டுதான் கீழே விழுந்ததாக தெரிவித்துள்ளார். மழை நீர் தேங்கிய பள்ளத்தில் கால் வைக்கும் சமயத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும் அருகிலிருந்தவர்கள் மீட்டபோதுகூட சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் கன்னியம்மாள் கூறுகிறார்.