சென்னையில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு, பலதரப்பிலிருந்தும், பாராட்டுகள் குவிகின்றன. சினிமா காட்சி போல துரத்திச் சென்று, லாவகமாக கீழே விழவைத்து, திருடனை மடக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை மணலி மாத்தூர் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், மாதவரம் பால்பண்ணை, பிருந்தாவன் காலனி அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், செல்போனை பறித்துச் சென்றனர். செல்போனை பறிகொடுத்த ரவி, கூச்சலிட்டபடியே, பைக்கில் வந்த வழிப்பறி திருடர்களை துரத்தியபடி ஓடி வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக, மாதவரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆன்ட்லின், பணிமுடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். ரவியை நிறுத்தி அவர் விசாரித்தபோது, செல்போனை பறிகொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்.ஐ ஆன்ட்லின் ரமேஷ், அந்த வழிப்பறி கொள்ளையர்களை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்றுள்ளார். எம்ஆர்எச் சாலை அருகே அவர்களின் பைக்கை வழிமறித்தபோது, ஒருவன் தப்பியோடிவிட, மற்றொருவன் வாகனத்தோடு தப்பிக்க முயற்சித்துள்ளான். தனது பைக்கை போட்டுவிட்டு, ஓடிச்சென்று, கீழே விழச்செய்து, திருடனை ரமேஷ் மடக்கிப் பிடித்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பின்னர், தாம் மடக்கிப்பிடித்த வழிப்பறி திருடனை, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில், எஸ்.ஐ ஆன்ட்லின் ரமேஷ் ஒப்படைத்தார். அந்த வழிப்பறி நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சர்மா நகரைச் சேர்ந்த அருண்ராஜ், தனது நண்பர்களுடன் கும்பலாக சேர்ந்து, சேப்பாக்கம் பகுதியில் தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அருணின் நண்பர்களான முகேஷ், விக்னேஷ், நவீன் ஆகியோரை கைது செய்த போலீசார், ஒரு திருட்டு பைக், மற்றும் 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையனை உதவி ஆய்வாளர் பிடித்த சிசிடிவி பதிவை டுவிட்டரில் வெளியிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், எஸ்.ஐ ஆன்ட்லின் ரமேசை நேரில் வரவழைத்தும் பாராட்டினார்.