சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால், நீர்தேவையைக் கருத்தில் கொண்டு, தண்ணீர் திறப்பை, குறைத்துள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் உச்சகட்ட நீர் தேக்கும் அளவு 24 அடியாகும்.
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து 22 அடியை நீர்மட்டம் நெருங்கியதால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நண்பகல் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
முதல்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி என்ற அளவில் நீர் திறக்கப்பட்டது. அப்போது மூன்று முறை சைரன் ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால், பின்னர் 3 ஆயிரம் கன அடியும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது.
பிறகு இரவு 10 மணி அளவில் 9 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தச்சூழலில், நள்ளிரவு 1 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு, வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி குறைக்கப்பட்டது.
பின்னர், காலை 6 மணியளவில் மேலும், 2 ஆயிரம் கனஅடி என, நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது.
இருப்பினும், ஏரி நீர் செல்லும் பகுதிகளில் அமைந்துள்ள திருநீர்மலை, குன்றத்தூர், சிறுகளத்தூர், கெழுத்திப்பேட்டை, அனகாபுத்தூர், முடிச்சூர், மற்றும் அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளான கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் போன்ற இடங்களில் வசிப்பவர்கள், அருகில் உள்ள மாநகராட்சி நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அடையாற்றில் சுமார் வினாடிக்கு 60ஆயிரம் கன அடி வீதம் நீர் சென்றாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் சென்னைவாசிகள் அச்சம் அடைய வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, கொட்டும் மழைக்கு நடுவே செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ஏரியின் தற்போதைய நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.