சென்னை - சவுகார்பேட்டையில் கடந்த 11 ஆம் தேதி, ராஜஸ்தான் தொழிலதிபர் தலீல்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணை சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கில், பிடிபட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ், அவனது கூட்டாளிகள் ரபீந்திரநாத் கர் மற்றும் விஜய் உத்தம் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார், நேற்று 10 நாள் காவலில் எடுத்திருந்தனர்.
விடிய - விடிய மூவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ், பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
தனது சகோதரி ஜெயமாலாவை, தலீல் சந்த் மற்றும் உறவினர்கள் பாலியல் சித்ரவதை செய்து வந்ததாகவும், இதனை ஷீத்தல் கண்டும் காணாமல் இருப்பதாக ஜெயமாலா கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறிய கைலாஷ், இதனால், அந்த குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் தாம் வைத்திருந்தது நாட்டு துப்பாக்கி என கூறிய கைலாஷ், தனது தம்பி விலாஷ் ஒரு வழக்கறிஞர் என்பதால், நட்புடன் பழகிய ஓய்வு பெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் காரை, கொலைக்கு பயன்படுத்தியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தனிப்படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலாஸ் வைத்திருந்த துப்பாக்கி, லைசென்ஸ் துப்பாக்கி என்பதால் முன்னாள் விமானப்படை அதிகாரியின் விவரங்களை எடுத்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, சவுகார்பேட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட மூவரை பிடிக்க, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.