சென்னையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை செளகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவில், தலில்சந்த் என்பவர், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ராஜஸ்தான் மாநிலம், பிரோகி ஜவான் பகுதியைச் சேர்ந்த தலில்சந்த், செளகார்பேட்டையில், பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், தலில்சந்த் மகள் பிங்கி என்பவர், இரவு 7.20 மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, தனது தந்தை, தாயார், சகோதரர் என 3 பேரும் படுக்கையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
யானைகவுனி போலீசார் உடனடியாக விரைந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார், தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், துப்புத்துலக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றி, விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை காவல் ஆணையர் கூறினார்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த, தலில்சந்தின் மகன் ஷீத்தலுக்கு, ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து 13 மற்றும் 11 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஜெயமாலா, கணவர் ஷீத்தலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து புனேவில் உள்ள பெற்றோருடன், தனது 2 மகள்களுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும், ஷீத்தலிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள ஜெயமாலா, ஜீவனாம்ச வழக்கு தொடுத்து இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, செளகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், குடும்பச் சொத்து தகராறு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.