விமான டிக்கெட் முறைகேடு வழக்கில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீர் முஸ்தபா உசேனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு துணைவேந்தராக பணியில் இருந்த போது சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்து விட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாக 7 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை பல்கலைக்கழகத்தின் நிதியில் இருந்து முறைகேடாக பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்த குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, முன்னாள் துணை வேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.