சென்னையில் வழிப்பறி செய்யப்படும் செல்போன்களை இடைத்தரகர் மூலமாக வாங்கி ஐஎம்இஐ எண்ணை மாற்றி விற்பனை செய்து வந்த 9 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னையில் செல்போன் பறிக்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சிசிடிவி மூலம் அந்த கும்பலை பின் தொடர்ந்த போது, அவர்கள் ஒரு நபரை சந்தித்து திருட்டு செல்போன்களை கொடுப்பதை கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து, தண்டையார்பேட்டையை சேர்ந்த மருது என்ற அந்த நபரை அடையாளம் கண்டனர். ஆனால் அவரை உடனடியாக கைது செய்யாமல், மொத்தமாக வாங்கி விற்கும் நபர்களையும் பிடிக்க திட்டமிட்ட தனிப்படை போலீசார், அந்த இடைத்தரகரை தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காணித்தனர்.
அதிகாலை 5 மணியளவில் பர்மா பஜார் அருகே ரிசர்வ் வங்கி சுரங்கபாதைக்கு சென்று, அங்கு வரும் நபர்களிடம் செல்போனை கொடுத்து பணம் பெறுவதை மருது வழக்கமாக கொண்டு இருந்தார். வழிப்பறியில் ஈடுபடும் திருடர்களிடம் இருந்து செல்போன்களை 500 முதல் 2000 வரை கொடுத்து வாங்கி வந்து பஜாரில் 2500 முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வரும் இடைத்தரகாராக மருது செயல்பட்டது தெரியவந்தது. கடையின் உரிமையாளர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் செல்போனின் தரத்தை பொறுத்து பணத்தை கொடுத்து வாங்கி செல்வார்கள் என்றும் போலீசாரிடம் மருது தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மருது போலவே இடைத்தரகர்களாக செயல்பட்ட மண்ணடி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி, பெரியதோப்பு பகுதியை சேர்ந்த புகழேந்தி, வியசார்பாடியை சேர்ந்த சந்துரு உள்ளிட்ட மேலும் 3 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த சகோதரர்களான எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இடைத்தரர்கள் மூலம் வாங்கிய செல்போன்களை பழுது நீக்கி, ஐஎம்இஐ எண்ணை சாப்ட்வேர் உதவியோடு நீக்கிவிட்டு போலி ஐஎம்இஐ எண்ணை பதிவிட்டு புதிய செல்போன்கள் போல மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை ரசீது இல்லாமல் குறைந்த விலைக்கு செல்போன் வாங்க ஆசைப்படும் நபர்களுக்கு கடையில் வைத்து விற்பனை செய்து வந்ததும், மேலும் இதற்காக உள்ள ஏஜென்ட்டுகள் மூலமாக தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான செல்போன்களை மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு தொடர்ந்து செல்போன்களை வழிப்பறி செய்து கொடுத்த ராயப்புரத்தை சேர்ந்த பிரவீன் கோயம்பேடு பகுதியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த விக்னேஷ் பிரபு ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். செல்போன் கும்பலிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 செல்போன்கள், 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், 9 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். விற்கப்பட்ட திருட்டு செல்போன்களை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.