சென்னை காவல் துறைக்கு அதி நவீன சைபர் லேப், ஒரே இடத்தில் இருந்தே சென்னை முழுவதும் கண்காணிக்கும் வகையிலான நவீன கட்டுப்பாட்டு அறையுடன் 40 கோடி ரூபாய் செலவில் காவல் ஆணையரக வளாகத்தில் 7 மாடி கட்டிடம் அமையவுள்ளது.
சென்னையில் காவல் துறையினை நவீன மயமாக்கும் திட்டத்தின் படி, முழுக்க முழுக்க அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்டு 7 மாடி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமையவுள்ள இந்த கட்டிடத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இக்கட்டிடத்தில், இணைய குற்றங்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் முதல் இரு தளங்களில் நவீன சைபர் ஆய்வகம் அமைகிறது. அதற்கு மேல் உள்ள தளங்களில் சென்னையின் ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நேரடியாக கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைய உள்ளது. ஏஎன்பிஆர் எனும் தானியங்கி கேமராக்கள் மூலம் இனி விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கான தானியங்கி முறையில் கணிணி வழி அபராத ரசீது செல்லும் வகையில் தொழில்நுட்பம் இங்கு ஏற்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழாவது தளத்தில் தான் மேலை நாடுகளில் உள்ளது போல், நகரம் முழுதும் உள்ள சிசிடிவிக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான நவீன கேமராக்கள் அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் நடந்து வருகிறது.
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுப்பாட்டு அறை இருக்கும் என காவல்துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.