மியான்மரில் மீட்கப்பட்டு சுமார் 75 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பிய காசிமேடு மீனவர்கள், நடுக்கடலில் 54 நாட்கள் உயிரை காக்க பெரும் போராட்டமே நடத்தியதாக தெரிவித்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் 23-ம் தேதி 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். புயல் காரணமாக ஆகஸ்ட் 7-ம் தேதி திட்டமிட்டபடி அவர்கள் கரை திரும்பவில்லை. செப்டம்பர் 15-ம் தேதி அதிகாலையில் மீனவர்களை மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் மீட்டனர்.
டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட மீனவர்களை அமைச்சர் ஜெயக்குமார், சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை கொடுத்து வரவேற்றார். அப்போது பேசிய அமைச்சர், 9 பேரில் மியான்மரில் மாயமான ஒரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
75 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பிய மீனவர்கள், தாங்கள் நடுக்கடலில் உணவின்றி தவித்ததை செய்தியாளர்களிடம் விளக்கினர். 29- வது நாள் முதல் வலை மூலம் மீன்களைப் பிடித்து உண்டு, உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தனர்.
கடலில் தத்தளித்த 17-வது நாள் அந்த பக்கம் வந்த படகில் வந்த இலங்கை நாட்டு மீனவர்களிடம் உதவி கேட்டதாகவும், அவர்கள் எவ்வளவோ முயன்றும் தங்களை மீட்க முடியவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
பல நாட்கள் மழைநீரை மட்டுமே குடித்து தாகம் தணித்துக்கொண்டு உயிர் வாழ்ந்ததாக மீட்கப்பட்ட மீனவர் பார்த்திபன் உருக்கமாக தெரிவித்தார்.
பல்வேறு தவிப்புகள், சிரமங்களுக்கு இடையே தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
75 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய மீனவர்களை கண்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி ஆரத்தி எடுத்து ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.