வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட் எனப்படும் பதிவு எண் தகட்டின் நிறம், எழுத்தின் அளவு ஆகியவற்றில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி அனைத்து தனியார் வாகனங்களிலும் தகட்டின் பின்னணி நிறம் வெள்ளை நிறத்திலும் எழுத்தின் நிறம் கருப்பு வண்ணத்திலும் இருக்க வேண்டும்.
அனைத்து வர்த்தக வாகனங்களிலும் தகட்டின் பின்னணி நிறம் மஞ்சள் நிறத்திலும் எழுத்து கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு பதிவு செய்த அனைத்து வாகனங்களுக்கும் HSRP எனப்படும் உயர் பாதுகாப்பு பதிவு எண் தகடு பொருத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.