சென்னை அம்பத்தூரில் பத்து வயதுச் சிறுவனை ஈடுபடுத்தி வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையனைக் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை வைத்துக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் கச்சனாகுப்பத்தில் வீடுகளில் கேஸ் சிலிண்டர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை களவுபோவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில் பரிமளா என்பவரின் வீட்டில் பத்தாயிரம் ரூபாய் பணம், 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்பேசிகள் ஆகியவை களவுபோனது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையன் 10 வயதுச் சிறுவனை வீட்டுக்குள் அனுப்பிக் கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.