சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் வருவோர் தனிமைப்படுத்தப்படும் அச்சத்தால் கொச்சி போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு வந்து சாலைவழியாக தமிழகத்திற்கு வந்தனர்.
பெரும்பாலான வந்தே பாரத் விமானங்கள் பெங்களூர், கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது.தற்போது தமிழக அரசு தனிமைப்படுத்தும் நாட்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
கோவிட் 19 நெகட்டிவ் மருத்துவச் சான்றுடன் வருவோரை ஏழுநாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறிய அளவில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவுக்கு சிறிய அளவில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை வெளியிட்டுள்ளன.
ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஏழு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால் அடுத்த மாதம் துபாய்க்கு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.