சென்னை மணலியில் உள்ள, சுமார் 700 டன் அம்மோனியம் நைட்ரேட்டை, சிறு சிறு அளவாக பிரித்து, தமிழகத்தின் பல்வேறு வேதிக்கிடங்குகளில் பாதுகாக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில், உரிய ஆவணங்கள் இன்றி கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு மணலியில் வேதிக்கிடங்கில் வைக்கப்பட்டது.
லெபனானில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறி பெரும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு, சென்னை காவல்துறை, துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.
முதல்கட்டமாக அம்மோனியம் நைட்ரேட்டை சிறு சிறு பகுதிகளாக பிரித்து காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வேதிக்கிடங்குகளுக்கு அனுப்பி பாதுகாத்து வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.