கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், வீடுகளில் இருந்து வெளித்தள்ளப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முறையாகக் கையாளாமல் விடுவது, சென்னையில் புதிய பிரச்சனையாக தலைதூக்கியுள்ளது.
சென்னையில் மார்ச் மாதத்திற்கு முன்னர் வீடுகளில் இருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளின் அளவு 5 டன் ஆக இருந்த நிலையில், அது தற்போது 16 முதல் 17 டன்களாக அதிகரித்துள்ளது.
இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மணலி ஆலைக்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்படுகிறது என்றும், மீதமுள்ள கழிவுகள் ஒன்று எரிக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ள இடுகாடுகளில் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன என்றும் புகார் எழுந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் வார்டு அலுவலகத்திற்கு அனுப்பப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளின் அளவு 500 கிலோவுக்கு அதிகமாக இருக்கும்போது, பாதுகாப்பாக அழிப்பதற்கு மணலி ஆலைக்கு அனுப்பப்படுகிறது.
500 கிலோவுக்கு குறைவாக இருந்தால், ஒன்று எரிக்கப்படுகிறது அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
கொரோனா சிகிச்சை மையங்கள், நகர ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் கழிவுகளை சேகரிக்க 2 ஒப்பந்ததாரர்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், மாநகராட்சிகளைப் பொறுத்தவரை, பொதுவான மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அழிக்கும் வசதிகளை உருவாக்க நிலம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதி.
இதற்கேற்ப, வீடுகளில் இருந்து கொரோனா அல்லாத, பிற மருத்துவக் கழிவுகளை கையாள தனி வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லது அதற்கென ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்களை எழுந்துள்ளன. மருத்துவக் கழிவுகள் பிற திடக் கழிவுகளுடன் கலப்பது ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மருத்துவமனைகளும் உள்ளாட்சி அமைப்புகளும், ஒப்பந்ததாரர்கள் மூலம் மருத்துவக் கழிவுகளை கையாள வேண்டும் என்றும், இதைக் கண்காணிக்க மட்டுமே தங்களால் முடியும் என மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மாநகராட்சியும் சில மருத்துவமனைகளும் புதிய விதிமுறைகளை கையாள்வதில்லை என்றும், கேட்பாரற்ற நிலங்களில் மருத்துவக்கழிவுகளை கொட்டி அத்தகைய இடங்களும் நிரம்பி வழிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னையில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும், கொரோனா அல்லாத பிற மருத்துவக் கழிவுகள், பிரிக்கப்படாமல் பெருங்குடி அல்லது கொடுங்கையூரில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது என்பதால், மருத்துவக் கழிவுகளை தனியே பிரிக்கும் வேலையை பணியாளர்கள் மேற்கொள்ள முடியாது என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சம்மந்தப்பட்ட வீடுகளே மருத்துவக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கிவிட்டால், அவற்றை பாதுகாப்பாக அழிக்கும் ஆலைக்கு அனுப்பி விட முடியும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தீர்வாக அமையும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.