சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வி திட்டத்தில் சேர, ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2010-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மூலம், முதல் பட்டதாரி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் வரும் 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அந்தஸ்து பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.