முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை, திமுக எம்பி கனிமொழி, உதயநிதி பெயர்களில் போலி டுவிட்டர் கணக்கு உருவாக்கி அவதூறு பரப்பியோர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜூன் 16ஆம் தேதி திமுக சார்பில் இணையம் வழியாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில் போலி சமூக வலைத்தளக் கணக்குகள் உருவாக்கி, திமுகவிற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
போலி சமூக வலைத்தளக் கணக்குகளில் ஆபாசப் பதிவுகளும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலான பதிவுகளும் போடப்பட்டு வருவதாகவும் ஆதாரங்களுடன் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் புகார் குறித்துச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தித் தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.