கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை விரைவில் மீண்டும் திறக்க வியாபாரிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 மாதங்களுக்கு முன் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, மொத்த வியாபாரச் சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. ஆனால் உரிய வசதிகள் செய்து தரப்படாமல் மழைக்காலங்களில் சந்தை சேறும் சகதியுமாக மாறி, வியாபாரிகளும் பொதுமக்களும் அவதியுறுவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.
இதனால் மீண்டும் மொத்த வியாபார சந்தையை கோயம்பேடு சந்தைக்கு மாற்றுவதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ள கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதற்காக வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, பல்வேறு சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.