சென்னையில் கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் எட்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. பாதிப்பு குறைந்தது எப்படி என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தின் 15 வார்டுகளில் 6 லட்சத்துக்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். மிகவும் குறுகலான தெருக்கள், நெருக்கமான வீடுகள், மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களால் தொடக்கத்தில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா காட்டுத்தீப் போலப் பரவி வந்தது.
இதையடுத்துப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள், களப்பணியாளர்கள் எனப் பலரும் பல்வேறு உத்திகளை வகுத்துக் களத்தில் இறங்கியதால் நல்ல பலன் கிடைத்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 816 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த மாதங்களைவிட அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும், இந்த மாதத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஆறாயிரம் களப் பணியாளர்களின் உதவியுடன் வீடுவீடாகச் சென்று அறிகுறி உள்ளோரைக் கண்டறிந்து விடுவதால், பரவல் குறையத் தொடங்கி இருப்பதாக மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இல்லாத தண்டையார்பேட்டையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதாகக் களப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 88 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
நாள்தோறும் ஆய்வு, தொற்று பரவல் குறித்த துல்லியக் கணக்கீடு, தடுப்புப் பணிகளில் தீவிரம் போன்றவற்றால் தண்டையார்பேட்டை மண்டலம் மற்ற மண்டலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.