கொரோனா பரவலைத் தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்படி ஒருவருக்கு தொற்று உள்ளதா என்பதை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கொண்டு 15 நிமிடத்தில் கண்டறிய இயலும்.
இந்நிலையில் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தலைமையகப் பணியாளர்கள் 564 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 452 பேருக்கு தொற்று இல்லை, 84 பேருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி தொற்று வர வாய்ப்பில்லை எனத் தெரியவந்தது என்று கூறியுள்ளார். தொற்றுக்கான வாய்ப்பு இருந்த 28 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் பொதுமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.