சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தலைமறைவாகியுள்ள மாநகராட்சி உதவி பொறியாளரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவருக்கு மாநகராட்சி உதவி பொறியாளர் கமலகண்ணன் என்பவர் செல்போனில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
இதையடுத்து, உதவி பொறியாளர் கமலகண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது. அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கமலக்கண்ணன் தலைமறைவாகியுள்ளதாகவும், 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.