கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்தப்பட உள்ள, துரித செயல் வாகனங்களின் சேவையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
தீயணைப்பு துறை வீரர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 லட்சம் இடங்களில் 5 லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் 50 துரித செயல் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
300 லிட்டர் கொள்ளளவில் திரவ சேமிப்பு வசதியுடன், குறுகிய சாலையில் சென்று கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த துரித செயல் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கொரோனா தடுப்பு பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் குறுகிய சாலையில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, 50 துரித செயல் வாகனங்களின் சேவையை துவக்கி வைப்பதன் அடையாளமாக, 9 வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.