சென்னை பெருநகர காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் எழுதிய கடிதத்தில், சிசிடிவி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் மூலம், இந்தியாவிலேயே சென்னையை பாதுகாப்பான நகரமாக உருவாக்கியதற்கு காவல்துறையினர் சிந்திய வியர்வையை இன்றும் நன்றியோடு எண்ணிப் பார்ப்பதாக கூறியுள்ளார்.
சவாலான பல்வேறு சூழ்நிலையிலும், கொரோனா காலத்திலும் முன்நின்று சென்னை காவல்துறையினர் பணியாற்றியிருப்பதாகவும், அதற்கு அவர்களின் குடும்பத்தினரும் உற்ற துணையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ள ஏ.கே. விஸ்வநாதன், அவர்களுக்கு தமது நன்றியையும் பாராட்டுதலையும் உரித்தாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரை மீண்டும் அதே பொறுப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும், சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டுமென கேட்டுக் கொண்டு, சென்னை பெருநகர காவல் துறையின் மாண்பை மேலும் வலுப்படுத்த அன்போடு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.