சென்னையில் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மிதமான மழை பெய்தது.
வியாசர்பாடி, பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காலை நேரத்திலும் ஆங்காங்கே விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.