ஊழியர்கள் வேலை இழக்கும் சூழலைத் தவிர்க்குமாறு ஐ.டி. நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளதாக வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் தகவல் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகளோடு காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 சதவீத ஊழியர்களோடு செயல்பட ஐ.டி. நிறுவனங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தற்போது அது 80 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பருவமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளதாகவும், கொரோனா காலத்திலும், பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை விடுவதை விட மக்களுக்கு வேறு எந்த சேவையும் செய்யவில்லை எனவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.