விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு இருந்தாலும் இஸ்ரோவின் செயல்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்ரோவில் IN-SPACe எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் நான்காவது அமைப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் IN-SPACe தன்னாட்சி அமைப்பாகச் செயல்படும் எனத் தெரிவித்த அவர், அதன் செயல்பாடுகள் இஸ்ரோவின் வேலையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் சிவன் கூறினார்.
இதுவரை தனியார் அமைப்புகள் இஸ்ரோவுக்கு ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக் கோள்களின் பாகங்களை தயாரித்துக் கொடுத்து வருவதாகத் தெரிவித்த சிவன், இனி தனியார்கள் சொந்தமாக ராக்கெட்டுக்கள் மற்றும் செயற்கைக் கோள்களை இஸ்ரோவின் ஏவுதளத்தைப் பயன்படுத்தி கட்டணத்துடன் ஏவிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.