கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படுவோரை அடிப்பது சட்டப்படி தவறு என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கசாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுவோரை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என விதிகள் உள்ளதாக கூறினார்.
சென்னை காவல் துறையை பொறுத்தவரை பிறர் மனதை புண்படுத்தும் படி பேசுவதே கூடாது என அறிவுறித்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 1,065 பேரில் நேற்று வரை 410 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.