சென்னையில் இன்று 2வது ஞாயிற்றுகிழமையாக எவ்வித தளர்வுகளும் இன்றி முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆள்நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் பெருமளவு குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியான போதே, அந்த காலகட்டத்திற்குள் வரும் இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் ஏதுமின்றி முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதே போல் இன்றும் 2வது முறையாக தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவம் சார்ந்த வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பால் நிலையங்களை தவிர்த்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. காய்கறி லாரிகளோ, வியாபாரிகளோ இல்லாததால் சந்தை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
சாலைகளில் போக்குவரத்தும், ஆள்நடமாட்டமும் குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளை இணைக்கும் சாலைகள் மூடப்பட்டு, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டை, வள்ளலார் நகர், சென்ட்ரல் ரயில் நிலையம், காசிமேடு, இராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.