சென்னையில் சொமேட்டோ நிறுவனத்தின் சீருடையணிந்து கோழி இறைச்சி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கண்ணகி நகரைச் சேர்ந்த ஒரு நபர் சொமேட்டோ நிறுவன சீருடை அணிந்து கோழி இறைச்சியை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், சரவணன் என்ற அந்த இளைஞனை மடக்கிக் கைது செய்தனர்.
சொமேட்டோ சீருடை அணிந்து சென்றால் போலீசார் விட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இந்த செயலில் ஈடுபட்ட சரவணனுக்கு அபராதம் விதித்த போலீசார், அவரை எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.