இரத்தத்தில் சர்க்கரையின்அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் இருந்தாலும் கொரோனாவின் பிடியில் இருந்து நிச்சயம் தப்பி, நீடூழி வாழ முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது, இந்த செய்தி...
விடாமல் துரத்தும் கொரோனா ! - தாறுமாறாக உயரும் பாதிப்பு ! என தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவல் உச்சம் எட்டி வருகிறது. அதேநேரம், மிரட்டும் கொரோனாவை ஒடுக்கும் பணியில் தமிழக சுகாதாரத்துறை, தீவிரமாக களமிறங்கி உள்ளது.
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு இருந்த பலர், கொரோனா சிகிச்சையின்போது உயிரிழந்து விட்டதாக சில புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்ட மருத்துவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின்அளவை கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டால், நீரிழிவு நோய் இருந்தாலும் கொரோனாவின் பிடியில் இருந்து நிச்சயம் தப்பி, நீடூழி வாழ முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உடல் நலனில் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ள மருத்துவர்கள், இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, இதய நோய், உடல் பருமன், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கு மாறு, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு வேளை கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டாலும் கூட, அச்சம் கொள்ளாமல், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவைகள் மூலம் நிச்சயம் தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.
அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள "இ- சஞ்சீவினி" என்ற இணைய தளத்தை பயன்படுத்தி பலன்பெறுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுறுத்தி உள்ள மருத்துவர்கள், உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கக்கூடிய தானிய வகைகள், பால் பொருட்கள், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சாப்பிடுமாறு யோசனை தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்தியில், வீட்டில் இருந்து பயன் பெறும் வகையில், நீரிழிவு நோயாளிகளுக்காக 99626 72222 என்ற உதவி எண்ணும், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி உஷாராக இருந்தால், அச்சமின்றி, நிச்சயம் மகிழ்ச்சியாக வாழலாம்.