சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில் இந்தியன் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மோசடி நடந்திருப்பதாக சிபிஐ-யில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் 100 கோடி ரூபாய் பணம், சென்னையில் உள்ள இந்தியன் வங்கி கிளை ஒன்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், துறைமுக பொறுப்பு கழகத்தின் அதிகாரி என கூறி வங்கி கிளைக்கு வந்த நபர், 50 கோடி ரூபாயை பிக்சட் டெபாசிட்டில் வைக்கவும், 50 கோடி ரூபாயை நடப்பு கணக்கில் வைக்கவும் கேட்டு அதற்கான ஆவணங்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆவணங்களைச் சரிபார்த்த வங்கி அதிகாரிகள், அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்ததால் குறிப்பிட்ட நபர் சொன்ன கணக்கிற்கு 100 கோடி ரூபாயையும் மாற்றியுள்ளனர்.
ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த கணக்கில் இருந்த 49 கோடி ரூபாய் இந்தியன் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு வெவ்வேறு வங்கிகளில் உள்ள பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டதால் இந்தியன் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், துறைமுக பொறுப்பு கழகத்தின் பெயரில் ஆவணங்களை தயாரித்து வந்து அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்த நபர், பணத்தை மோசடி செய்தது அம்பலமானது. உடனடியாக மாற்றப்பட்ட கணக்கில் மீதமிருந்த 51 கோடி ரூபாயை வங்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்ட தொகை அதிகமாக இருப்பதால் சிபிஐ- விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதே பாணியில் பெங்களூரில் உள்ள கனரா வங்கி கிளையில் பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் 47 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக அவ்வங்கி கிளை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பணத்தை முதலீடு செய்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமான இடைத் தரகர்கள் மூலம் இந்த மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த மோசடி புகார் குறித்து சிபிஐயின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.