சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக உள் நோயாளிகளாக அனுமதி கேட்டு வருவோரின் விவரங்கள் குறித்து அறிய மருத்துவர்களும் நோயாளிகளும் பாதுகாப்பாக உரையாடும் வகையில் அங்கு ஒலி வாங்கி மற்றும் ஒலிப்பெருக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுபவர்கள், அறிகுறிகள் இருந்து தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து சிகிச்சை பெற வருபவர்கள் என சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் எப்போதும் பரபரப்பாகவே உள்ளன.
அந்த வகையில் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு வருபவர்களிடம் முதற்கட்ட தகவலைப் பெற மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
இங்கு வருபவர்களிடம் பெயர், தொழில், அறிகுறிகளின் தன்மை, வெளியூர் பயணங்கள் குறித்து முதலில் கேட்கப்படும். அதன் பின்னர், அவர்களது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட உடற் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, இறுதியாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்படி வருவோர்களிடம் குறிப்பிட்ட தொலைவில் இருந்தவாறு முதற்கட்ட தகவல்களைப் பெற கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பிரத்யேக ஒலிவாங்கி மற்றும் ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் மருத்துவர் அங்குள்ள ஒலிவாங்கி வாயிலாக மருத்துவம் தொடர்பான தகவல்களை சொல்ல, அது வெளியில் இருக்கும் ஒலிப்பெருக்கியில் தெளிவாகக் கேட்கிறது. மருத்துவமனையில் சேர வருபவர்கள் அங்குள்ள ஒலிவாங்கியில் கூறும் தகவல்கள் உள்ளே மருத்துவர்களுக்கு கேட்கும் வகையில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் விவரத்தை பெற்ற பின்னர் அவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவை கணக்கிடக்கூடிய கருவி மூலம் சுவாச அளவு, இரத்த அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு அவர்கள் உள் நோயாளியாக அனுமதிப்பதற்கான வழிவகை செய்யப்பட்டு உள்ளது.