தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து அதில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர் செய்ய புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதனிடையே சென்னையில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட அயனாவரத்தில், மாநகராட்சி முதல்நிலை பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்தா மருந்துகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலோசனைக்கு பின்னர் முதலமைச்சர் உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.